வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..
பெங்களூரு நகரில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு வால்வோ பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்திய பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று ( திங்கள்கிழமை) காலை 9.25 மணியளவில் ஹெப்பல் அருகே பெங்களூரு விமான நிலையத்திலிருந்து - எச்.எஸ்.ஆர் லே அவுட்டுக்கு பெங்களூரு போக்குவரத்து கழகத்தின் வால்வோ பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பெங்களூரு அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. இந்த பேருந்தானது சாலையில் சென்றுகொண்டிருந்த 4 நான்கு சக்கர வாகனங்கள் மீதும், 4 இருசக்கர வாகனங்கள் மீதும் அடுத்தடுத்து மோதி நின்றது. இந்த பரபரப்பான விபத்தின் சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்தக் காட்சிகள் பதிவாகியிருந்தன. இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். அத்துடன் எதிரே வந்த வாகனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மோதியதில், பைக்கில் வந்த இருவர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து ஹெப்பல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.