×

வீட்டு உபயோக மின்சாரத்துக்கு 200 யூனிட் வரை அரசு மானியம்! புதுச்சேரி அரசு அதிரடி

 

புதுச்சேரியில் வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு அரசு மானியம் வழங்க ஆணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுகளுக்கு புதிய கட்டணமான யூனிட்டுக்கு ரூ 2.70க்கு  45 பைசா மானியம் தரப்படுகிறது.

புதுச்சேரி மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இணை மின்சார ஆணையத்தின் புதிய கட்டண விகிதங்கள் வீட்டு உபயோக நுகர்வோருக்கு ஏற்படும் கூடுதல் கட்டண சுமை குறித்து புதுச்சேரி அரசால் ஆலோசிக்கப்பட்டு, மின்சாரச் சட்டம் 2003 இன் பிரிவு 55 இன் விதிகளின்படி, வீடுகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு அரசு மானியம் வழங்க ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வீட்டு மின் நுகர்வோருக்கும் முதல் 100 யூனிட்டுகளுக்கு புதிய கட்டணமான யூனிட்டுக்கு ரூ 2.70க்கு  45 பைசா மானியம் தரப்படும்.

இதன் மூலம் பொதுமக்கள் வீடுகளில் பயன்படுத்தும் முதல் 0-100 யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் கடந்த ஆண்டில் செலுத்திய யூனிட் ஒன்றுக்கு ரூ 2.25 என்ற அதே கட்டணமே செலுத்த வேண்டும். அனைத்து வீட்டு மின் நுகர்வோரும், மாதந்தோறும் 101 யூனிட் முதல் 200  யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு 40 பைசா வழங்கப்படும். இதன் மூலம், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரையிலான வீட்டு மின் நுகர்வோருக்கு விதிக்கப்பட்டுள்ள யூனிட்டுக்கு ரூ.4.00க்கு பதிலாக ரூ 3.60  மட்டுமே செலுத்தலாம்.  மேற்கண்ட மானியம் 16.06.2024 முதல் இந்த நிதி ஆண்டில் நடைமுறையில் இருக்கும். மேலும், தற்போது நடைமுறையில் உள்ள மாதம் 100 யூனிட் மின்சாரம் கீழே உபயோகப்படுத்தப்படும். வீட்டு நுகர்வோர்களுக்கு 50% அரசு மானியம் தொடரும். அதேபோல் விவசாயத்திற்கு பயன் படுத்தப்படும் மின்சாரம் முழுவதும் இலவசமாக வழங்கப்படும்.

புதுச்சேரியில் 300 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூபாய் 7.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 300 யூனிட்டுகளுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூபாய் 9.65, 400 யூனிட்களுக்கு மேல் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூபாய் 10.70, 500 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கப்படும் ஒவ்வொரு யூனிட் மின்சாரத்திற்கும் ரூபாய் 11.80 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. எனவே, புதுவையில் வீடு உபயோகத்திற்கு மின் கட்டணம் அண்டை மாநிலங்களை விட குறைவாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.