×

 “அயலக மண்ணிலும், அரசுப் பணி தொடர்கிறது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

 


 “அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் E-OFFICE வழியே பணி தொடர்கிறது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி அமெரிக்கா  புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். தொடர்ந்து 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதலில் சான் பிரான்சிஸ்கோ நகரில் தொழில் முதலீடுகளை ஈர்த்த முதலமைச்சர், பின்னர் சிகாகோ சென்று அங்குள்ள  முக்கிய தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளை  சந்தித்துப் பேசி வருகிறார்.  

இதனிடையே தமிழக வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள், தமிழ்சங்கங்கள் சார்பில் ஏற்படு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  அத்துடன் அயல்நாட்டில் இருந்தாலும் தமிழ்நாட்டில் நடைபெறும் சம்பவங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சமூக வலைதளங்கள் வாயிலாக அனைத்து நிகழ்வுகளுக்கும் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அந்தவகையில் நேற்றைய தினம் அசோக் நகர் பள்ளியில் சர்ச்சைகுரிய வகையில் ஆன்மீக சொற்பொழிவாற்றிய விவகாரம் தொடர்பாகவும் கருத்துதெரிவித்திருந்தார்.   

அவர் தனது பதிவில், “தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும்,  முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய  வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன்.” என்று குறிப்பிட்டிருந்தார். 

 இந்நிலையில் இன்று இ-ஆபிஸ் வழியாக அரசு கோப்புகளில் கையெழுத்திடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள், உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கின்றன. அயலக மண்ணிலும், அரசுக் கோப்புகள் தேங்கிடாமல் #e_office வழியே பணி தொடர்கிறது...” என்று குறிப்பிட்டுள்ளார்.