×

“ரொம்ப அசிங்கமா இருக்கு”... தமிழக கல்லூரி பாடத்திட்டம்- ஆளுநர் குற்றச்சாட்டு

 

பாடங்களில் திராவிட வரலாறு தான் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற பி.செந்தில்குமார் எழுதிய ‘பாஞ்சாலங்குறிச்சி போர்கள்” என்ற நூல் வெளியிட்ட விழாவில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழக பல்கலைக்கழக பாடங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள்தான் அதிகம் உள்ளன. சுதந்திர போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை. கல்லூரி பாட புத்தகங்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய பாடங்கள் இல்லை. நமது விடுதலைக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி சிந்திக்க மறந்து விட்டார்கள். 

கல்லூரி பாட புத்தகங்களில் ஆங்கிலேயர் பற்றிய புராணங்களும், பாராட்டுகளுமே நிரம்பிவருகின்றன. பிரிட்டிஷாரை பாராட்டி கல்லூரி பாட புத்தகங்களில் கருத்துகள் இடம்பெறுவதா? பாட புத்தகங்களில் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசை பாராட்டி கருத்துகளை இடம்பெற்று இருப்பது சரியா?. தமிழக கல்லூரிகளில் இது போன்ற ஒரு பாடத்திட்டம் இருப்பது மிகவும் அசிங்கமாக இருக்கிறது. ஆங்கிலேய அரசு 10 லட்சம் பேரை அடிமையாக, அபாயகரமான வேலைகளில் கொத்தடிமைகளாக பயன்படுத்தியது. 19 ஆம் நூற்றாண்டு மிகவும் சிறப்பானது என்றும், ஆங்கிலேயர்களின் சமூகநீதி குறித்தும் தற்போது பாடம் கற்பிக்கப்படுகிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.