×

நாட்டின் விடுதலைக்கு பாடுபட்ட பழங்குடியின மக்களை நாம் மறந்துவிடக் கூடாது- ஆளுநர் ரவி

 

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் பெருமை தினம் மற்றும் ஜார்கண்ட் மாநிலம் உருவான தின விழா நடைபெற்றது. இந்த விழாவை ஆளுநர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக பழங்குடி மக்களின் பாரம்பரிய கண்காட்சியை ஆளுநர் பார்வையிட்டார். விழாவில் பத்ம ஸ்ரீ விருது பெற்ற மாசி சடையன், வடிவேல் கோபால், ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி, விமானப்படை கேப்டன் கவுரி மிஸ்ரா ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நீங்கள் சாலை வழியாக பயணம் செய்து மக்களை சந்தித்தால் அவர்கள் மத்தியில் சிறிய சிறிய அளவில் மட்டுமே கலாச்சார மாற்றங்கள் உள்ளது என்பதை அறிய முடியும். அரசியல் காரணங்களுக்காக மாநில தினங்களை கொண்டாடி வருகின்றனர். மாநில தினங்களை கொண்டாடும் போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கலாச்சார வேற்றுமைகளை அங்கு உள்ள கலாச்சாரத்தை கொண்டாட வேண்டும். அதன் காரணமாகவே தற்போது அனைத்து மாநிலங்களிலும் அனைத்து மாநில தினங்களும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து விடுதலை பெற பல லட்சம் நபர்கள் தங்கள் உயிர்களை, ரத்தங்களை வழங்கி உள்ளனர். ஆனால் தற்போது சுதந்திர போராட்ட வீரர்களையும் அவர்களின்  தியாகங்களையும் மறந்து வருகிறோம். சுதந்திர வீரர்களை மறக்கும் சமூகம் வளர முடியாது. சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பெரிய அளவில் பாடங்கள் இல்லை. நிறைய நபர்கள் சுதந்திர போராட்டத்தில் உயிர் இழந்து உள்ளனர். அதில் பழங்குடி மக்கள் பங்கு பெரிய அளவில் உள்ளது.

பழங்குடி மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உள்ளனர். நான் நாகாலாந்து மற்றும் மேகாலயா சென்ற நேரத்தில் பார்த்தால் ஏராளமான நபர்கள் சுதந்திரத்துக்காக உயிர்களை தியாகம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் குறித்து யாருக்கும் தெரியவில்லை. இதை கருத்தில் கொண்டே பிரதமர் மோடி இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா கொண்டாடத்தின் ஒரு பகுதியாக யாருக்கும் தெரியாத சுதந்திர போராட்ட தியாகிகளை கண்டறியும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு அதன் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் பல ஆயிரக்கணக்கான நபர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அனைவரும் சுதந்திரம் பெற்றதை கொண்டாடிய நேரத்தில் ஆங்கிலேயர்கள் வெளியேறி இருந்தாலும் அவர்கள் நம் மூளையில் ஆழமாக பதிந்து உள்ளனர்.  அவர்களை நீக்க வேண்டும்.  அப்போது தான் சுதந்திரம் பெற்றதாக கருத முடியும் என காந்தி தெரிவித்தார்.

பழங்குடி மக்கள் நம் குடும்பத்தின் ஒரு பகுதி. அவர்களை கண்டு நாம் பெருமை கொள்ள வேண்டும். பழங்குடி மக்களை பின்தங்கிய மக்களாக மட்டுமே பார்க்கின்றனர், கலாச்சாரம் என்ற பெயரில் கலாச்சாரத்தை முழுமையாக ஒரு சிலர் புரிந்து கொள்வதில்லை. பழங்குடி மக்கள் என்றால் நல்ல வீடு இருக்க கூடாது. பழங்குடி மக்கள் என்றால் நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வர வேண்டும். நல்ல படிப்பு இருக்கக் கூடாது என்பது இல்லை அனைவருக்கும் சமமாக அனைத்தும் கிடைக்க வேண்டும்.அவர்களுக்கு கல்வியில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வளவு மக்களை பின் தங்க வைத்து விட்டு எப்படி நாடு முன்னேறும், 10 கோடிக்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இந்தியாவில் உள்ளனர்.  குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் நாட்டின் வளர்ச்சியில் இருக்க வேண்டும்.

பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்ற பெயரில் மிக பெரிய சுரண்டல் நடைபெற்று வருகிறது. பழங்குடி மக்களில் சிறந்த மருத்துவர்கள் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கலாச்சாரத்தை இழக்காமல் வளர்ந்து வருகின்றனர். பழங்குடி மக்கள் வாழும் மக்களை தமிழகத்தில் நான் சந்தித்தேன். அவர்களை பார்த்து பாம்பு பிடிக்கும் நபர்கள் என கூறுகின்றனர். ஆனால் அவர்கள்தான் லட்சக்கணக்கான மக்களை பாதுகாத்து வருகின்றனர். பழங்குடி மக்களிடம் நன்றியுடன் நாம் இல்லை என்பதை ஏற்றுகொள்ள முடியாது. பழங்குடி மக்கள் அனைத்து உயர் பதவிகளுக்கும் வர வேண்டும். அப்போது தான் நாடு வளர முடியும். வளர்ந்ததாக கருத முடியும். அப்போது தான் நாம் நினைக்கும் இடத்திற்கு நாடு முன்னேறும்” என்றார்.