×

ஆளுநர் தேநீர் விருந்து : திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு..  

 


சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. 

நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி  தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும்  ஆளுநர் மாளிகையில்  தேநீர் விருந்து வைக்க உள்ளார். இதனையடுத்து இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுக்கு ஆளுநர் மாளிகை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஆனால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக  திமுக கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன. அதன்படி காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.