×

சென்னைக்கு 6 பெட்டிகள் கொண்ட  மெட்ரோ ரயில் கொள்முதல் : மத்திய அரசு ஒப்புதல்..  

 

முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில்  பயணிகளின் வசதிக்காக 6  பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்கள் கொள்முதல் செய்ய ஒன்றிய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. 

சென்னையில் முதற்கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை -  சென்ட்ரல் ரயில் நிலையம்  வரையும் மொத்தம் 54 கி.மீ. தொலைவுக்கு தலா 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களில் தினசரி 3 லட்சம் முதல் 3.50 லட்சம் பேர் வரை பயணிக்கின்றனர். பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், மெட்ரோ ரயில்களின் சேவை கூடுதலாகத் தேவைப்படுகிறது. எனவே,மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை உயர்த்த கோரிக்கை வைக்கப்பட்டது. 

இரு வழித்தடங்களில் பயணிகள் வசதிக்காக, மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-ல் இருந்து 6-ஆக உயர்த்தவும், 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில்களைக் கொள்முதல் செய்ய கடந்த ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அனுப்பிய கருத்துருக்கு  தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்து. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூடுதலாக தேவைப்படும் ரயில்பெட்டிகளைக் கணக்கிட்டு, ரூ.2,820.90 கோடி மதிப்பில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்ய கடந்த ஜூன் மாதம் நிதி ஆயோக் ஒப்புதல் அளித்தது.  நிதி ஆயோக் ஒப்புதல் அளித்துள்ள நிலையில்   நிதித் துறை மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறையும் இந்த கருத்துருக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதால் சர்வதேச வங்கிகளிடம் இருந்து கடன் உதவி பெற்று  மெட்ரோ ரயில்களை தயாரித்து பெற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.விரைவில் இதற்கான பணிகளை சென்னை மெட்ரோ நிறுவனம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.