வானிலையை துல்லியமாக கணிக்க டாப்ளர் ரேடார்கள் - ரூ.50 கோடிக்கு டெண்டர் கோரிய அரசு..
வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமாநதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்களை (Doppler Radar) ரூ.50 கோடியில் கொள்முதல் செய்ய பேரிடர் மேலாண்மைத்துறை டெண்டர் கோரியுள்ளது.
தீவிர வானிலை நிகழ்வுகளால் தமிழ் நாடு தொடர்ச்சியாக பாதிப்படைந்து வருகிறது. வானிலை நிகழ்வுகளை துல்லியமாக கணிப்பதில் இருக்கும் இடைவெளியால் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருமழையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் கடும் உயிர் சேதத்தையும், பொருட்சேதத்தையும் சந்தித்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கான பிரத்யேக வானிலை முன்னறிவிப்பு தொழில்நுட்பங்கள் உருவாக்க 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டில் 3 அறிவுப்புகள் வெளியிப்பட்டது.
இதில், மிக முக்கியமாக வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமாநதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) ரூ.50 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்களை கொள்முதல் செய்ய தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை துறை டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் ரேடார்கள் இந்த இரண்டு இடங்களில் நிறுவப்படும் என்று பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.