×

 அரசுப் பள்ளியில் ஆன்மீக உரை - சர்ச்சை பேச்சு குறித்து விளக்கமளிக்க உத்தரவு..  

 

சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்தியதோடு, ஆசிரியரை அவமரியாதை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறபித்துள்ளது.  

தற்போது சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு  மோட்டிவேஷனல் ஸ்பீச்  வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மோட்டிவேஷனல் ஸ்பீச் என்கிற பெயரில், பாவம் , புண்ணியம், மறுபிறவி,  மத்திரங்களை படித்தால் நோய் குணமாகும், குருகுலக் கல்வி சிறந்தது என ஆன்மீக சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். அரசு பள்ளி கருத்தரங்கில் உரையாற்றிய மகாவிஷ்ணு , மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக,  ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும்,  இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  

அத்துடன் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் கண்டனம் தெரிவித்தார். ஆனால் அவரிடமும் மகா விஷ்ணு உரத்தக்குரலில் ஆணவத்தோடு பேசியிருந்தார்.  மாற்றுத்திறனாளிகள் உணர்வை காயப்படுத்தியதோடு,   எதிர்ப்பு தெரிவித்த பார்வையற்ற ஆசிரியரையும்  அறிவற்றவர் என சொற்பொழிவாளர் பேசியதும் கண்டனத்துக்குரியதாகி உள்ளது.  பார்வையற்ற ஆசிரியரை அவமதிக்கும் வகையில் மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்ததற்கு  சமூக வலைதளங்களில் நெடிசன் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்தனையடுத்து அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.