×

இனி ஜி.பி.எஸ் முறையில் உட்பிரிவு பட்டா..!

 

பட்டா பெறுவதில் உள்ள சிரமங்களை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, நிலத்தின் ஒரு பகுதியை விற்பனை செய்வோர், 'சர்வேயர்' வாயிலாக முன்கூட்டியே அளந்து, உட்பிரிவு செய்ய வேண்டும்.

இதன் அடிப்படையில் பத்திரப்பதிவு முடிந்ததும், தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றம் மேற் கொள்ளப்படும். இத்திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள் நிலையில், பல்வேறு தலையீடுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

அதனால், புதிதாக வழங்கப்படும் பட்டாவில், சொத்து குறித்த விபரங்களை துல்லியமாக குறிப்பிட, வருவாய் துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தற்போதைய நிலவரப்படி, சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் பல்வேறு பாகங்களாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாகங்களை நில அளவையாளர் அளந்து, அதன் நான்கு எல்லைகளையும் அடையாளப்படுத்துவார்.

அதன்பின், 'மேனுவல்' முறையில் நில அளவை வரைபடம் தயாரிக்கப்படும். இதில், அந்தஉட்பிரிவின் நான்கு பக்கத்திலும் உள்ள சர்வே எண்கள் அல்லது உட்பிரிவுகள் விபரம் மட்டும் குறிப்பிடப்படும்.

புவிசார் தகவல்கள்

இந்த நடைமுறையை, மொத்தமாக மின்னணுமயமாக்கும் வகையில், அந்த நிலத்தின் ஜி.பி.எஸ்., எனப்படும், புவிசார் தகவல்கள் சேர்க்கப்படும்.

அத்துடன், அட்சரேகை, தீர்க்க ரேகையில் இருந்து அந்த நிலம் எவ்வளவு தொலைவில் அமைந்துள்ளது என்ற விபரங்கள், 'டிஜிட்டல்' முறையில் சேர்க்கப்படும்.

மேலும், எப்போது அங்கு நில அளவை செய்யப்பட்டது என்பது உள்ளிட்ட கூடுதல் தகவல்களும் சேர்க்கப்படும்.

முதல் கட்டமாக, விருதுநகர், நாமக்கல், பெரம்பலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

உட்பிரிவு பட்டா மட்டுமல்லாது, புதிய பட்டா வழங்குவதிலும், ஜி.பி.எஸ்., முறை படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன்படி, உட்பிரிவு பட்டா கையில் இருந்தால் போதும்; அதில் சம்பந்தப்பட்ட நிலம் எங்கு அமைந்துள்ளது என்ற விபரங்களை, பொது மக்கள் கணினி வாயிலாக எளிதில் அறியலாம்.