சென்னை அண்ணா நகரில் களைகட்டிய ''ஹேப்பி ஸ்ட்ரீட்''
சென்னை அண்ணாநகர் 2 வது நிழற்சாலையில் 5 வது வாரமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி களைகட்டியது. சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் விபத்துக்களை தடுப்பது மற்றும் போதை பொருள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
அண்ணாநகர் 2 வது நிழற்சாலை புளு ஸ்டார் சந்திப்பு முதல் 3வது நிழற்சாலை சந்திப்பு வரை காலை 6 மணி முதல் 9 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. அண்ணா நகரில் மொத்தம் 3 மணி நேரம் இந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வயது பேதமின்றி இசைக்கப்பட்ட பாடலுக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்தனர். சிறுமிகள் தங்களின் கைகளில் குட்டிக் குட்டி படங்களை ஓவியமாக வரைந்து கொண்டாடினர்.
சென்னையில் முக்கிய பகுதிகளான தி நகர் , பெசன்ட் நகர் ,அண்ணா நகர் போன்ற பகுதிகளில் பரபரப்பான சூழலில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே இவற்றையெல்லாம் மறக்க ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கடந்த ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பம்பரம் விடுதல், சைக்கிளிங், ஸ்கேட்டிங், வில்வித்தை, பாரம்பரிய நடனங்கள், கராத்தே, கோலம் போட்டி, பாட்டுப் போட்டி, நடனம், யோகா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
ஊரகப் பகுதிகளில் நடைபெறும் திருவிழாக்கள் போல சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னையில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சியானது என்றும் வரவேற்கத்தக்கது என்றும் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் வார நாட்களில் தொடரும் வேலைப்பளுவிற்கு இடையே தங்களுக்கு இது போன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு அமைதியையும் புத்துணர்ச்சியும் தருவதோடு மகிழ்ச்சியையும் தருவதாக தெரிவிக்கிறார்கள். இரவு நேரங்களில் மட்டுமே ஒலிக்கும் டிஜே காலை நேரங்களிலும் ஒலித்தது. சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.