நெகிழ்ச்சி சம்பவம் : தலைமுடியை தானமாக வழங்கிய செவிலியர்கள்..!
சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம் தேதி கொண்டாடப்படுகிறது.1965-ம் ஆண்டிலிருந்து உலக செவிலியர் அமைப்பு இந்த தினத்தை அனுசரித்து வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான் கடை தூய சவேரியார் கத்தோலிக்க நர்சிங் கல்லூரியில் முடி தானம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.இதில் 192 நர்சிங் மாணவிகள், 9 நர்சிங் ஆசிரியர்கள் என மொத்தம் 201 பேர் முடி தானம் செய்தனர். இவர்களில் ஒரு கர்ப்பிணி மாணவியும் அடங்குவார். இதில் குமரி மாவட்டம் 15-வது மண்டலத்துக்கு உட்பட்ட 13 நர்சிங் கல்லூரி நிறுவனங்கள் கலந்து கொண்டன.இதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அழகுகலை பெண் நிபுணர்கள் மாணவிகளின் தலைமுடிகளை வெட்டி எடுத்ததோடு, அதை அழகுபடுத்தியும் முடி வெட்டுவதால் மாணவிகளுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையையும் நீக்கினர்.
புற்றுநோயாளிகளுக்கு முடி தான செய்யும் இந்த நிகழ்வு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இடம் பெற ஒரு சாதனை முயற்சியாக மண்டல ரீதியாக தொடங்கி உள்ளது. இதற்கான இறுதி நிகழ்வு சென்னை அப்பல்லோ காலேஜ் ஆப் நர்சிங் கல்லூரியில் வருகிற எட்டாம் தேதி நடைபெறும். தானம் செய்யப்பட்ட கூந்தல்களை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என கல்லூரி முதல்வர் தெரிவித்தார்.