×

'வெப்ப அலை' - மாநில பேரிடராக அறிவிப்பு 

 

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் வெப்ப அலையில் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகிறது. ந்குறிப்பாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெப்ப அலை வீசியது. சென்னை, கோவை, கடலூர்,ஈரோடு, நாமக்கல், மதுரை,தஞ்சாவூர், திருச்சி, வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் அதிக நாட்கள் வெப்ப அலை பதிவானது. இதனைத் தொடர்ந்து, வெப்ப அலையை எதிர்கொள்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி பொது இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைப்பது, ஓ ஆர் எஸ் கரைசல் வழங்குவது, திறந்தவெளியில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலம் கருதி பணி நேரத்தை மாற்றி அமைப்பது, எப்ப அலைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் தனி பிரிவுகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. 



இந்நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது, பருவநிலை மாற்றத்தால் தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலை தாக்கம், மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் அறிவித்தார். இதை செயல்படுத்தும் விதமாக வெப்ப ஆலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வெப்ப அலையால் மரணம் அடைந்தால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள், ஓஆர்எஸ் கரைசல் வழங்க மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்தி கொள்ளலாம் என்று  வெப்ப அலை தாக்கத்தின் போது தண்ணீர் பந்தல் அமைத்து குடிநீர் வழங்குவதற்கு மாநில பேரிடர் நிதியை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.