×

நீலகிரியில் கனமழை- பள்ளியை சூழ்ந்த வெள்ளம்

 

குன்னூர் பர்லியாறு பகுதியில் இரவில் கொட்டி தீர்த்த கன மழையில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு துவக்கப்பள்ளிக்குள் மண் மற்றும் மழை நீர் புகுந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பர்லியாறு பகுதி.  இங்கு சுமார் 60 கற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்  நேற்று இரவு நேரத்தில் பர்லியாறு பகுதியில் கன மழை பெய்தது. கன மழை காரணமாக ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. இதில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கம் நடைபெறும் இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு  ஊராட்சி துவக்க பள்ளியில்  தண்ணீர் மற்றும் மண்  புகுந்து பாதிப்பு ஏற்பட்டது.  சுமார் ஐந்து அடி அளவில் மண் பள்ளிக்குள் புகுந்துள்ளது. 

பள்ளிக்கு மாணவர்கள் வரும் முன்னே இந்த சம்பவம் நடந்ததால் பெறும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.  பர்லியாறு பகுதியில் தொலைதொடர்பு இல்லாத காரணத்தால் மண் சரிவு ஏற்பட்டது குறித்து தகவல் அளிக்க கால தாமதம் ஏற்பட்டது. தற்போது பர்லியாறு ஊராட்சி பணியாளர்கள் பள்ளியில் இருந்து மண் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் தற்காலிகமாக அருகில் உள்ள அங்கன் வாடியில் பயின்று வருகின்றனர். பெறும் மழை பெய்தால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.