×

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. 

 

அரபிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று  14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வடதமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய  தென்கிழக்கு  அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று ( ஆக.20)  தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர்,  நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

21.08.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி,  திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

22.08.2024 முதல் 26.08.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை,  அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  லேசான / மிதமான  மழை  பெய்ய வாய்ப்புள்ளது. 
       
மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகளில் ஆக.20 முதல் 24.08.2024 வரையில் மன்னார்  வளைகுடா,  தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.