×

கனமழை எச்சரிக்கை:  15 செயற்பொறியாளர்கள் நியமனம்.. மின் இணைப்பு எண்ணுடன் புகார் அளித்தால் உடனே நடவடிக்கை..!

 

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மண்டலங்களுக்கு செயற்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.  இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் என்றும்  வானிலை மையம் கணித்துள்ளது.   

 தமிழ்நாட்டில் வரும் 17ம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் அதிலும் நாளை  (அக்டோபர் 15) மற்றும்  நாளை மறுநாள் (அக்டோபர் 16) ஆகிய 2 நாட்கள் வடதமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,  இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம்   உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகனமழை( ரெட் அலெர்ட்) பெய்யும் என்றும்,  நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில்  கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதன் காரணமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

அதில் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் 15 செயற்பொறியாளர்களின் நியமித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  15 செயற்பொறியாளர்களும்,  கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  சமூக வலைத்தளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின் இணைப்பு எண்ணுடன் புகாரை இணைத்து பதிவிட்டால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த மழையின் போது தண்ணீரில் மூழ்கிய 4,800 பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது என்றும்,  31 துணை மின் நிலையங்களில் தண்ணீர் புகாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.