×

சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறும் மக்களால் கடும் வாகன நெரிசல்

 

ஆயுத பூஜை முன்னிட்டு நாளை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆண்டு வார இறுதி நாட்களும் ஆயுத பூஜையுடன் சேர்ந்து வருவதால் மூன்று நாட்களுக்கு விடுமுறை உள்ளது. இதனால் சென்னையில் உள்ள வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். 

அந்த வகையில் சென்னையில் இருந்து மதுரவாயல் தாம்பரம் புறவழி சாலை வழியாகவும், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.  இந்த இரு சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாம்பரம் மதுரவாயல் புறவழி சாலையில் உள்ள வானகரம் சுங்கச்சாவடியில் இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 

இதேபோல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயில், நெற்குன்றம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது  இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தொடர்ந்து இந்த சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தில் நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுப்பதால், சென்னையில் இருந்து ஒரே நேரத்தில் வெளியேறும் மக்களால் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய சாலைகளான கிண்டி, கத்திப்பாரா, போரூர் சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் வேலைக்கு சென்று வீடு திரும்புவோரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளனர்.