×

சென்னை - திருச்சி சாலையில் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் கடும் போக்குவரத்து நெரிசல்.. தவிக்கும் மக்கள்.. 

 


சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து  கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 
 
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாட்கள் என   4 நாட்கள் தொடர் விடுமுறை  காரணமாக பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர்.  இதன்காரணமாக கிளாம்பாக்கத்தில் இருந்து3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி நேற்று (ஆகஸ்ட் 14) 470 பேருந்துகளும், ஆகஸ்ட் 16,17ல் 365 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.  இதேபோல்  கோயம்பேட்டில் இருந்து நேற்று 70 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில்,  ஆகஸ்ட் 16, 17ல் 65 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேபோல் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகளும்,  மாதவரத்தில் இருந்து 3 நாட்களுக்கு 20 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.  

இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில்  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை -  திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.  சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற மினி லாரி மீது  பின்னால்  சென்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மோதியதில்  மினி லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் திருச்சி - சென்னை  தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  

இதில் மினி லாரி ஓட்டுநருக்கு சிறு காயம் ஏற்பட்ட நிலையில், விபத்து குறித்து  மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரம் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம்  வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.  லாரி அகற்றும் பணியில் மதுராந்தகம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  கண்டைனர் லாரி அதிக பாரம் என்பதால் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.  இருப்பினும் 7 மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் வழியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.