×

சுதந்திர தின விருது பெற்றோர் முழு விவரம் இதோ..!

 

 
சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுதந்திர தின முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.   

இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழாவையொட்டி செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து  சுதந்திர தின உரையை  நிகழ்த்திய அவர்,   தகைசால் தமிழர் விருது, ஏபி.ஜே. அப்துல்கலாம் விருந்து உள்ளிட்ட சுதந்திர தின முதலமைச்சர்  விருதுகளை வழங்கினார். அதன்படி தகைசால் தமிழர் விருது, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்பட்டது.  விழுப்புரத்தைச் சேர்ந்த,  இஸ்ரோவின் சந்திராயன் -3 விண்கல திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேலுக்கு  டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது வழங்கப்ட்டது.  

துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான கல்பனா சாவ்லா விருது,  வயநாடு நிலச்சரிவின் போது துணி்ச்சலாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த கூடலூரைச் சேர்ந்த செவிலியர் சபீனாவுக்கு வழங்கப்பட்டது.  இதனைத்தொடர்ந்து முதலமைச்சரின் சிறந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான விருதுகளை தமிழக முதலமைச்சர் வழங்கினார்.  அந்த வகையில்  சென்னை மாநகராட்சியில் உள்ள 14வது மண்டலம் சிறந்த மண்டலமாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. 

மேலும், சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சியும், சிறந்த நகராட்சியாக  திருவாரூர் நகராட்சியும்,   சிறந்த பேரூராட்சியாக  கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் பேரூராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தந்த பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.  இதேபோல்  முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள் ஆன்கள்  பிரிவில்  ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த  நெ.கதிரவன், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த  ஜோசன் ரெகோபெர்ட் , கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராஜ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.  

அதேபோல்  மாநில இளைஞர் விருது பெண்கள் பிரிவில் நிகிதா,  கடலூர் மாவட்டம்;  கவின் பாரதி,  புதுக்கோட்டை மாவட்டம்;   உமாதேவி, விருதுநகர் மாவட்டம்;   ஆயிஷா பர்வீன் ராமநாதபுரம் மாவட்டம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணியாற்றும் சிறந்த மருத்துவராக செங்கல்பட்டு மாவட்டம் கோவளம், ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனத்தை சேர்ந்த மருத்துவர் விஜயலட்சுமிக்கும்,   சிறந்த சமூக பணியாளராக சென்னை திரிசூலத்தை சேர்ந்த சூசை ஆன்றணி என்பவருக்கும்,   சிறந்த தொண்டு நிறுவனமாக சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த வித்யாசாகருக்கும்,  மாற்றுத்திறனாளிகளை அதிக அளவில் பணியமர்த்திய நிறுவனமாக  தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தானம் பேக்கேஜிங் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக அளவில் கடன் வசதி  உள்பட அவர்களின் நலன்களில் பங்கெடுத்து வரும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக காஞ்சிபுரம் மாவட்ட வங்கி தேர்வு செய்யப்பட்டு முதலமைச்சர் விருது வழங்கப்பட்டுள்ளது.