கேரவேனில் ரகசிய கேமரா- நடிகை ராதிகாவிடம் விசாரிக்க திட்டம்
மலையாள திரையுலக பாலியல் விவகாரத்தில் நடிகை ராதிகாவிடம் விசாரிக்க சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது.
மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த நீதிபதி ஹேமா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஹேமா கமிட்டி ரிப்போர்ட் வெளியான பின்னர் பல நடிகைகள், தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தற்போது கூறி வருகின்றனர். இதனையடுத்து பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழுவை கேரள அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில் கேரவேனில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதாக ராதிகா தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்த நிலையில், சிறப்பு விசாரணை குழு ராதிகாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. நேரடியாக வாக்குமூலம் பெறவும் கேரள நடிகர்களின் பாலியல் புகார்களை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே நடிகை பாக்யலட்சுமி, கேரவனில் ரகசிய கேமரா பொருத்தி நடிகைகளின் ஆபாச காட்சிகள் பகிர்வது தெரியவந்தவுடன், ஏன் வெளிப்படுத்தவில்லை? என நடிகை ராதிகாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “பிரபலமான ராதிகா, வேறு பெண்களுக்கு நிகழ்ந்த சம்பவமாக கருதி இதை மறைத்திருந்தால் அது சரியல்ல. தங்களுக்கு கேரவன் வேண்டாம் என்று கூறும் தைரியம் பெண்களுக்கு வேண்டும்” என மலையாள நடிகை பாக்யலட்சுமி தெரிவித்துள்ளார்.