×

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள பெங்கல் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரியில் விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி நகர பகுதி மட்டுமல்லாமல், கிராமப்பகுதிகள்  முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் மக்கள் அதிகம் கூடும் தற்காலிக பேருந்து நிலையத்தில் மழை காரணமாக தண்ணீர் தேங்கியது மட்டுமல்லாமல் சேறும் சகதியுமாக‌ காட்சியளிக்கிறது. இதனால் பயணிகள் சேற்றில் நடந்து சென்று பேருந்து ஏறும் சூழல் நிலவி வருகிறது. இந்த மழை காரணமாக புதுச்சேரி நகரப் பகுதியில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிருப்பதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி அடைந்தனர். 

காரைக்காலிலும் தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டும் புதுச்சேரியில் நாளை கனமழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரி‌ மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி- கல்லூரிக்கு நாளை விடுமுறை அளித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே புதியதாக உருவாகியுள்ள ஃபெங்கல் புயலை, எதிர்கொள்ள புதுச்சேரி அரசு தயாராக உள்ளது என்றும் கடலோர பகுதி என்பதால் புதுச்சேரி எப்போதும் தயாராக இருக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.