எத்தனை கோவில்களில் சிலைகள் பாதுகாப்புக்காக ஸ்ட்ராங்க் ரூம்கள் உள்ளன? ஐகோர்ட் கேள்வி
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தமிழகத்தில் எத்தனை கோவில்களில் சிலைகள் பாதுகாப்புக்காக ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில், கோவில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆயிரத்து 824 கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், 263 கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டு விட்டதாகவும், இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எத்தனை கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன? இன்னும் எத்தனை கோவில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட வேண்டியுள்ளது? அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.