தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் தலித் முதல்வராகலாம்- ஹெச்.ராஜா
கொடியை அறிமுகப்படுத்தியுள்ள நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை கட்டியாவயல் அருகே செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, “கொடியை அறிமுகப்படுத்தியுள்ள நடிகர் விஜய்க்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். நடிகர் விஜய் யாருடைய ஓட்டை பிரிப்பார் என்பது தான் கேள்வியாக உள்ளது. புதிதாக ஒருவர் வருவதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. திமுகவின் மொழியை பேசக்கூடியவராகத்தான் விஜய் உள்ளார். அவரின் வருகை குறித்து பாஜக பொருட்படுத்தி கொள்வதற்கு ஒன்றுமல்ல,
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சி முதிர்ச்சியற்ற பேச்சு, இந்தியாவில் தலித் ஒருவர் முதலமைச்சராக முடியவில்லை என்று திருமாவளவன் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பல்வேறு மாநிலங்களில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் முதலமைச்சராக ஆகியுள்ளனர். பாஜக பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்துள்ளது. பட்டியலின மக்களை கவுரவப்படுத்தும் கட்சி பாஜக, தமிழ்நாடு மக்கள் பெருவாரியாக பாஜகவை ஆதரித்து விட்டால் திருமாவளவனின் வருத்தம் தீரும்.
திமுக கூட்டணிக்குள் ஏதோ நடந்து கொண்டுள்ளது,வெளியே வரட்டும் பார்த்துக் கொள்ளலாம். ஆளுநரை அளித்த தேநீர் விருந்து திமுக கலந்து கொண்ட நிலையில் திமுக கூட்டணி கட்சியினர் யாரும் கலந்து கொள்ளாத போதே அங்கு ஏதோ நடக்கிறது என்பது தெரிகிறது. உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரோ அல்லது வேறு எந்த பதவிகளுக்கு வந்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை. அதனால் எந்த தாக்கமும் ஏற்படப்போவதுமில்லை. அதைப்பற்றி பேச வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை” என்று தெரிவித்தார்.