மக்களின் உயிர்களுக்கு என்ன உத்திரவாதம்? ஸ்டாலினின் இரும்புக் கரங்கள் துருப்பிடித்து விட்டதா? - ஹெச்.ராஜா
மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால், மக்களின் உயிர்களுக்கு என்ன உத்திரவாதம்? என பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹெச். ராஜா தனது எக்ஸ் தளத்தில், “திராவிட மாடல் ஆட்சி = வன்முறைக் குற்றங்களின் முகவரி ! சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணிபுரியும் அரசு மருத்துவரை சிலர் கத்தியால் குத்தி கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு தறிகெட்டு, தமிழக மக்கள் உயிர்பயத்தில் தங்களின் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு நாளுக்கொரு சான்று நமக்கு கிடைத்துக் கொண்டேதான் இருக்கிறது.
தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சர்வாதிகார ஆட்சியில், பணியில் இருக்கும் ஒரு அரசு மருத்துவருக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்பை நினைக்கையில் அச்சம் படர்கிறது. குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவதாக வாய்ச்சவடால் விட்ட சர்வாதிகாரி ஸ்டாலின் அவர்களின் இரும்புக் கரங்கள் துருப்பிடித்து விட்டதா? மக்களின் உயிரைக் காக்கும் மருத்துவர்களுக்கே உரிய பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால், மக்களின் உயிர்களுக்கு என்ன உத்திரவாதம்? எனவே, எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்று வெற்று விளம்பரம் செய்வதை நிறுத்திவிட்டு, வன்முறைக் குற்றங்களை அடக்குவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.