பயணிகள் கவனத்திற்கு... சென்னையில் பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்படுவது ஏன்?
போக்குவரத்து நெரிசல் காரணமாக சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
சென்னையில் மாநகரப் பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையும் மாநகரப் பேருந்துகள் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கவும் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகர் போக்குவரத்துக் கழகம் ஆய்வு நடத்திவருகிறது. சிக்னல் மற்றும் மேம்பாலங்கள் சாலையுடன் இணையும் இடங்களின் அருகேயுள்ள நிறுத்தங்களில் பேருந்துகள் நின்று செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சிக்னலில் பச்சை நிறம் ஒளிரும்போதும் சிக்னல் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வரிசைகட்டி நிற்கும்போது, பேருந்துகளின் பின்பக்கம் நிற்கும் வாகனங்கள் முன்னோக்கி செல்ல முடியாமல் பேருந்துகள் புறப்படுவதை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலை உருவாகிறது. பேருந்துகள் புறப்படத் தயாராகும்போது சிவப்பு நிறம் ஒளிரத் தொடங்குவதால் கார் உள்ளிட்ட வாகனங்கள் சிக்னலில் காத்திருக்கும் நேரம் அதிகரித்து , போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆகவே சிக்னல், மேம்பாலங்கள் ஆகியவற்றுக்கு 100 மீட்டர் முன்பாகவோ, பின்பாகவோ மட்டுமே பேருந்து நிறுத்தங்கள் இருக்கும் வகையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சென்னையின் பல இடங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படாமல் உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பேருந்து நிறுத்தங்களை மாநகர் போக்குவரத்து கழகம் தன்னிச்சையாக இடம் மாற்ற முடியாது. சென்னை பெருநகர மாநகராட்சியிடம் பரிந்துரைத்து மாநகராட்சி மூலமே நிறுத்தங்களை இடம் மாற்ற முடியும்
பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து முதல் கட்டமாக பாரிமுனை - முகப்பேர் (( 7M bus route )) , வடபழனி - தரமணி (( 5 T bus route )) வழித்தடங்களில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னையின் அனைத்து வழித்தடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.