×

மனைவி தாய் வீட்டுக்கு சென்றதால் கணவன் தூக்கிட்டு தற்கொலை

 

மனைவி சண்டை போட்டுவிட்டு அம்மா வீட்டிற்கு சென்றதால் கணவன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான ஊரப்பாக்கம் அடுத்த காரனை புதுச்சேரி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(வயது 28). இவருக்கு கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சந்தோஷ் குமார் தினந்தோறும் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் தாமதமாக வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. இதனால் சந்தோஷிற்கும் அவரது மனைவி திவ்யாவிற்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை திவ்யாவிற்கும் சந்தோஷிற்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு சந்தோஷ் திவ்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவி கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு சென்றதால் மன உளைச்சலில் இருந்த சந்தோஷ் குமார் வீட்டில் அவரது அறையில் சென்று மனைவியின் புடவையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்பு அக்கம் பக்கத்தினர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ டத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்பு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.