×

 ‘ஹீரோவாக காட்டிக்கொள்ள நினைத்தேன்..’ சக மாணவனால் உயிரிழந்த 11ம் வகுப்பு மாணவர்..   

 

நாமக்கல் அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்த நவலடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (16). இவர்  வரகூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வரும் ரித்தீஷ் (16) என்கிற மாணவருக்கும், ஆகாஷுக்கும் இடையே நேற்று மாலை மோதல்  ஏற்பட்டது.  நேற்று மாலை இருவரும் பள்ளி வளாகத்தில்  திடீரென  ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்து சக மாணவர்களும், ஆசிரியர்களும் சண்டையை தடுத்துள்ளனர். ஆனால் இந்த சண்டையில்  ஆகாஷ் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளான்.  

உடனடியாக ஆசிரியர்கள் மாணவர் ஆகாஷை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எருமப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரி பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே மாணவன் உயிரிழந்ததாக  தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாணவனின் உடல் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வுக்காக பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எருமப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்தின் போது இருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையில் அதே பள்ளியில்  படித்து வரும் ஒரு மாணவியை இரண்டு மாணவர்களும் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளதாகவும்,  இதில் யார் முந்துவது என போட்டி இருந்து வந்ததாக உறுதிபடுத்தப்படாத  தகவல் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த நேற்று, வழக்கமாக மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே காலணியை விட்டுச் செல்வது போல் ஆகாஷும் விட்டுச் சென்றிருக்கிறார். பின்னர் ரித்தீஷ் அந்த காலணியை தூக்கி வீசியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி மாணவர் உயிரிழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. தன்னை ஹீரோவாக காட்டிக்கொள்ள ரித்தீஷ், செருப்பை தூக்கி வீசியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  பள்ளியில் சக மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..