×

மகா விகாஸ் அகாதி வென்றால் மகாராஷ்டிர மாநிலமே காங்கிரஸின் ‘ஏடிஏம்’ ஆகிவிடும் : அமித்ஷா..!

 

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஷிந்த்கேடா மற்றும் சாலிஸ்கான் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது: “சில நாட்களுக்கு முன்பு உமேலா குழுவைச் சேர்ந்தவர்கள், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சியின் தலைவரை சந்தித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டனர். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றால், எஸ்சி – எஸ்டி – ஓபிசி-க்கான இடஒதுக்கீட்டை குறைக்க வேண்டும். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், உங்கள் நான்கு தலைமுறைகளால் கூட எஸ்சி – எஸ்டி – ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை வெட்டி முஸ்லிம்களுக்கு கொடுக்க முடியாது.

மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதாரத்தை 5-வது இடத்துக்கு கொண்டு சென்றார். 2027-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் பொருளாதாரம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

மகா விகாஸ் அகாதி (சிறுபான்மையினரை) தாஜா செய்வதையே விரும்புகிறது. அதிகாரத்துக்காக பால் தாக்கரேவின் கொள்கைகளை உத்தவ் தாக்கரே மறந்துவிட்டார். அவுரங்காபாத் நகருக்கு சம்பாஜி நகர் என்று பெயர் மாற்றுவதை எதிர்ப்பவர்களுடன், ராமர் கோயில் கட்டுவதை எதிர்ப்பவர்களுடன், முத்தலாக் தடை சட்டத்தை எதிர்ப்பவர்களுடன், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 370 நீக்கத்தை எதிர்ப்பவர்களுடன் உத்தவ் தாக்கரே அமர்ந்திருக்கிறார். இந்துக்களை பயங்கரவாதிகள் என்று அழைப்பவர்களுடன் அவர் உள்ளார்.

பாஜக தலைமையிலான கூட்டணியான மகாயுதி என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் இடம் பெற்றுள்ள மகா விகாஸ் அகாதி என்றால் அழிவு என்று அர்த்தம். வளர்ச்சியை கொண்டு வருபவர்களை ஆதரிக்க வேண்டுமா அல்லது அழிவை கொண்டுவருபவர்களை ஆதரிக்க வேண்டுமா என்பதை வாக்காளர்கள் தீர்மானிக்க வேண்டும்.

வக்பு சட்டத்தால் நாட்டில் மக்கள் சிரமப்படுகின்றனர். சமீபத்தில், கர்நாடகாவில் உள்ள வக்பு வாரியம், கிராமங்களை வக்பு சொத்து என்று முடிவு செய்தது. 400 ஆண்டுகள் பழமையான கோயில்கள், விவசாயிகளின் நிலங்கள், வீடுகள் ஆகியவை வக்பு சொத்தாக மாறின. வக்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மசோதா கொண்டு வந்துள்ளோம். ஆனால் ராகுல் காந்தியும், சரத் பவாரும் மசோதாவை எதிர்க்கின்றனர். ராகுல் காந்திக்கு நான் சொல்கிறேன், நீங்கள் தடுத்தாலும் வக்பு சட்ட திருத்தத்தை பிரதமர் மோடி நிறைவேற்றுவார்.

மகாயுதி அரசாங்கம் அமையும்போது, மகாராஷ்டிராவின் அன்பு சகோதரிகளின் வங்கிக் கணக்கில் மாதம்தோறும் ரூ 2,100 டெபாசிட் செய்யப்படும். விவசாயிகளின் கணக்கில் ஆண்டுக்கு ரூ.12,000-க்கு பதிலாக ரூ.15,000 வரவு வைக்கப்படும். உங்கள் ஒரு வாக்கு, இந்தியாவின் எதிர்காலத்தை வலுப்படுத்தும்.

ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்கப் போகிறது. மகாராஷ்டிராவில் மகாயுதி அரசு ஆட்சிக்கு வரப்போகிறது. காங்கிரஸ் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுவதே இதற்குக் காரணம். ஒருவேளை தவறுதலாக மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி அரசு ஆட்சிக்கு வந்தால், வளமான மகாராஷ்டிரா மாநிலமானது காங்கிரஸின் ஏடிஎம் ஆகிவிடும். மகாராஷ்டிர மாநிலத்தின் வளங்களைப் பயன்படுத்தி நிதியை எடுத்து டெல்லிக்கு அனுப்புவார்கள். மாறாக, மகாயுதி ஆட்சி அமைத்தால், மோடி நிர்வாகம் மகாராஷ்டிராவுக்கு பெரிய வளர்ச்சியை உறுதி செய்யும்” என்று அமித் ஷா பேசினார்.