×

சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில் 6வது முறையாக சென்னை ஐஐடி முதலிடம்

 

சிறந்த கல்வி நிறுவனங்கள் தரவரிசைப் பட்டியலில்  சென்னையில் உள்ள இந்திய தொழில் நுட்பக் கழகம் ஒட்டுமொத்தப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளது.


இந்தியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசை 2024 பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார். அப்போது உரையாற்றிய தர்மேந்திர பிரதான், தரவரிசை, மதிப்பீடுகள் மற்றும் அங்கீகாரம் ஆகியவை தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய பரிந்துரைகள் என்று கூறினார். தேசிய கல்விக் கொள்கையின் உணர்வை தரவரிசைப் பட்டியல் ஆழமாக பிரதிபலிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார். கற்பித்தல், புதுமை, ஆராய்ச்சி, பட்டப்படிப்பு, பிற துறைகளில் சிறந்து விளங்கிய அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் அமைச்சர் பாராட்டினார்.

ஒரு கல்வி நிறுவனத்தின் தரம், செயல்திறன் மற்றும் வலிமையை அறிவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உரிமை என்று அமைச்சர் குறிப்பிட்டார். எனவே, நாட்டில் உள்ள அனைத்து 58,000 உயர் கல்வி நிறுவனங்களும் தரவரிசை மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பின் கீழ் வர வேண்டும் என்று தெரிவித்தார். வேலைவாய்ப்பு மற்றும் திறன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக திரு பிரதான் கூறினார். நமது தரவரிசை நடைமுறையில் திறன் மேம்பாட்டையும் ஒரு அளவுகோலாக சேர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.  

2016-ம் ஆண்டுக்கான, இந்திய தரவரிசைப் பட்டியலில், பொறியியல், மேலாண்மை மற்றும் மருந்தியல் ஆகிய மூன்று துறைகளுக்கான தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஒன்பது ஆண்டுகளில், ஏழு புதிய பிரிவுகள் மற்றும் ஐந்து புதிய பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்தமாக பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில பொதுப் பல்கலைக்கழகங்கள், திறந்தவெளி பல்கலைக்கழகங்கள், திறன் பல்கலைக்கழகங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் பொறியியல், மேலாண்மை, மருந்தகம், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல், மருத்துவம், சட்டம், பல் மருத்துவம் மற்றும் வேளாண்மை மற்றும் அவை சார்ந்த துறைகள் ஆகிய 8 பாடப் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஒட்டுமொத்தப் பிரிவில் சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் முதலிடம் பிடித்தது. பொறியியல் பிரிவில் தொடர்ந்து 9-வது ஆண்டாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.