×

உலகத்திலேயே நம்பர் 1 படிப்பை அறிமுகப்படுத்திய ஐஐடி

 

ஐஐடி மெட்ராஸ், முன்னாள் மாணவர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவாக 2023-24ம் நிதியாண்டில் ரூ.513 கோடி நிதி திரட்டியுள்ளது. முந்தைய நிதியாண்டான 2022-23ல் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் புதிய சாதனையைப் படைக்கும் நோக்கில் ரூ.218 கோடி திரட்டப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிட பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, “மிக விரைந்த கல்வி வளர்ச்சிக்கு மிக அதிக அளவில் நிதி திரட்டப்பட வேண்டியது அவசியமாகிறது. முன்னெப்போதையும் விட அதிகளவில் நிதி திரட்டுவதற்கு ஆதரவளித்த சமூகப் பொறுப்புணர்வு நிதி கூட்டாளர்களுக்கும், ஐஐடி மெட்ராஸின் முன்னாள் மாணவர்களுக்கும் நன்றி. ஐஐடி மெட்ராஸின் இன்ஸ்டிடியூஷனல் அட்வான்ஸ்மெண்ட் அலுவலகத்தால் நிதி திரட்டும் பணி வழிநடத்தப்பட்டு வருகிறது. இதனை முன்னாள் மாணவர்களைக் கொண்ட, ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர் தொண்டு அறக்கட்டளை மேற்பார்வையிடுகிறது. நடப்பாண்டில் இந்த வெற்றிக்காக முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது பெற்ற திரு. சுனில் வாத்வானி மிகச் சிறந்த பங்களிப்பாக ரூ.110 கோடி வழங்கியுள்ளார். இதன் மூலம் தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான பிரத்யேகப் பள்ளி ஒன்றை நிறுவும் ஐஐடி மெட்ராஸின் கனவு நனவாக்க உந்துசக்தியாக இருந்தது. இந்தாண்டு B.tech AI and Data analysis- ஐ ஐஐடியில் அறிமுகப்படுத்தவுள்ளோம். இது உலகத்திலேயே நம்பர் ஒன் கோர்ஸ். இந்த கோர்ஸை வேற எந்த பல்கலைக்கழகத்திலும் அறிமுகப்படுத்தவில்லை. இதை படித்தால் நிறைய வேலை வாய்ப்பு இருக்கிறது.

இந்தோ-எம்ஐஎம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும் சிறந்த முன்னாள் மாணவருக்கான விருதைப் பெற்றவருமான டாக்டர் கிருஷ்ணா சிவுகுலா இதற்கான முன்முயற்சிக்கு ஆதரவு அளித்துள்ளார். அந்த நிதி மூலம் நடப்பாண்டில் புதிய முயற்சியாக விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு திரட்டப்பட்ட நன்கொடைகளில் இருந்து அவர்களுக்கும் ஆதரவு அளிக்கப்படும்” என்றார்.