வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறப்பு
“தமிழ் அகராதியின் தந்தை” வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை மார்பளவு சிலை, பெரும்புலவர் கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண் ஆகியவற்றை திறந்து வைத்து, சுதந்திர போராட்ட வீராங்கனை குயிலி திருவுருவச் சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்கள் "வாளுக்குவேலி அம்பலம்" மற்றும் வெண்ணி காலாடி ஆகியோருக்கு திருவுருவச் சிலைகள், காந்தியடிகள் - தோழர் ஜீவா ஆகியோர் சந்திப்பின் நினைவாக அரங்கம் ஆகிய பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டின் புகழ்சால் பெருந்தகையாளர்கள், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டு தமிழ்நாட்டிற்குப் பெருமைத் தேடித்தந்த அறிஞர் பெருமக்கள், சமூகநீதி, விடுதலை உணர்வுகளை ஊட்டிவளர்த்த கவிஞர்கள், இசை மேதைகள், தமிழ்நாட்டின் தியாக வரலாற்றுக்கு உன்னத சாட்சியங்களாக விளங்கும் தியாகிகள், மேதைகள் மற்றும் அறிஞர்களின் நினைவுகளைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையிலும், தமிழ் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பை பெருமைப்படுத்தும் வகையிலும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நினைவகங்கள், திருவுருவச் சிலைகள், அரங்கங்கள், நினைவுத் தூண்கள், நினைவுச் சின்னங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு, சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் திறந்து வைத்தல்
அந்த வகையில், இத்தாலிய நாட்டைச் சேர்ந்த கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயரை கொண்ட வீரமாமுனிவர், கிறித்தவ சமயத் தொண்டாற்றுவதற்காக மதுரை வந்து தமது சமயப்பணிக்கு தமிழ் மொழியறிவு மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து, தமிழ் கற்கத் தொடங்கி தமிழராகவே மாறி, தமிழ் மேதையாக உருவெடுத்தார்.
"தமிழ் அகராதியின் தந்தை" எனப் போற்றப்படும் வீரமாமுனிவர் அவர்கள், திருக்குறள் அறத்துப் பாலையும். பொருட்பாலையும் லத்தீன் மொழியில் மொழிபெயர்த்தது, "குட்டி தொல்காப்பியம்" என்று புகழப்படும் தொன்னூல் விளக்கத்தை படைத்தது, இயேசு நாதரின் வரலாற்றைத் தேம்பாவணி எனும் காவியமாக உருவாக்கியது, திருக்காவலூர்க் கலம்பகம், அடைக்கல மாலை, அன்னை அழுங்கல் அந்தாதி, கித்தேரியம்மாள் அம்மானை முதலிய சிற்றிலக்கியங்களை படைத்தது, என தமிழ் மொழிக்கு வீரமாமுனிவர் ஆற்றியுள்ள மாபெரும் தொண்டுகளைப் போற்றிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம், காமநாயக்கன்பட்டி கிராமம், புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீரமாமுனிவரின் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.