×

எ.வ.வேலு வீட்டில் இரவிலும் தொடரும் வருமான வரித்துறை சோதனை

 

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவருக்கு சொந்தமான கல்லூரி மற்றும் வீடுகளில் 4- வது நாளாக இரவிலும் விடிய விடிய வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.


தமிழ்நாடு அமைச்சரவையின் முக்கிய அங்கம் வகிப்பவர் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு. திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் அமைச்சருக்கு சொந்தமான வீடு மற்றும் அருணை பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மகளிர் கலை கல்லூரி,பாலிடெக்னிக், பன்னாட்டு பள்ளி என பல கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவண்ணாமலைக்கு வருகை தந்த அமைச்சர் எ.வ. வேலு வீட்டில்  கடந்த 3- ஆம் தேதி காலை 7 மணி முதல் வருமானவரித் துறையினர் தொடர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். 

அமைச்சருக்கு சொந்தமான வீடு, பொறியியல்கல்லூரி, மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் தற்போது மத்திய தொழிற்படை பாதுகாப்பு போலீசார் உதவியுடன் அதிரடி சோதனையானது நடைபெற்று வருகிறது. 3- ஆம் தேதி காலை 20 கார்கள் 2 வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் உள்ளே நுழைந்த வருமானவரித்துறை அதிகாரிகள் 4- வது நாளாக இன்றும் இரவு விடிய விடிய சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் மத்திய தொழிற்படை பாதுகாப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் ஈடுபட்டுள்ள இடங்கள் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு CISF போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 4- வது நாளாக இரவு முழுவதும் விடிய விடிய வருமான வரி சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.