×

நில அபகரிப்பில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர்- வீட்டில் நுழைந்து தங்கம், வெள்ளியை தூக்கிய சிபிஐ

 

சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு, அண்ணா நகர் காவல் ஆய்வாளர்கள் குடியிருப்பில் வசித்து வரும் அவரது வீட்டில் இன்று காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது நிலத்தை ஒரு கும்பல் அபகரித்துக் கொண்டதாகவும், அந்த கும்பலுக்கு உடந்தையாக அப்போது நீலாங்கரை காவல் ஆய்வாளராக இருந்த ஆனந்த பாபு செயல்பட்டதாகவும் காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்தால் நடவடிக்கையை எதுவும் எடுக்கப்படவில்லை என்பதால் நீதிமன்றத்தை நாடுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, நிலம் கார்த்திக்குச் சொந்தமானது என்பதற்கான அனைத்து முகந்திரமும் இருப்பது தெரிந்தும் கண்களை மூடிக்கொண்டு நிலத்தை அபகரிக்க காவல்துறையினர் உதவியுள்ளனர் என கண்டித்ததோடு, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து நான்கு மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இதுதொடர்பாக விசாரணையை தொடங்கிய சிபிஐ, காவல் ஆய்வாளர் ஆனந்தபாபு மீது நில அபகரிப்பு வழக்கை பதிவு செய்து, அண்ணாநகர் காவலர் குடியிருப்பில் உள்ள வீட்டில் காலை 7:30 மணி முதல் ஆறு பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு அவரது வீட்டில் சோதனை நடத்தினர். இதே போல், இந்த வழக்கு தொடர்பாக  சென்னை அடையார் சாஸ்திரி நகர், பெசன்ட்நகர் அடுக்குமாடி குடியிருப்பில் எஸ்பிஐ வங்கிப் பெண்  அதிகாரி ஹரிணி என்பவர் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக சோழிங்கநல்லூர் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள வீடு மற்றும் வேளச்சேரி நேரு நகர் பகுதியில் உள்ள வீடு ஆகிய 5 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. 5 மணி நேர சோதனை முடிவில் காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு வீட்டில் இருந்து தங்க,வெள்ளி ஆபரணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு இவற்றை மதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.


 ...