×

சிறை தண்டனைக்கு இடைக்கால தடை - பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வாய்ப்பு

 

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் பொன்முடி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேலும் அவர் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு சிறை தண்டனை மட்டும் நிறுத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில்  சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ. ஆக தொடர வாய்ப்புள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்.