சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்களை அவதூறாக பேசியது, ஹோட்டல் அறையில் கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் முதலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் வழக்கு விசாரணைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக அவர் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிறார். பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் ஜாமின் பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒருசில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, இப்போது கஞ்சா வைத்து இருந்ததாக அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்நிலையில் தனக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தற்போது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலேயே மேல்முறையீடு செய்யவும் சவுக்கு சங்கருக்கு தலைமை நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.