×

ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா ? - டிடிவி தினகரன் சாடல்.. 

 

நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு மாதந்தோறும் தடையின்றி ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு மாதங்களாக ஊதியமின்றி தவிக்கும் மகளிர் பண்டக சாலையின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடை ஊழியர்கள் - கார் பந்தயத்திற்கும், விளம்பரத்திற்கும் நிதி ஒதுக்கிவிட்டு, நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் அலைக்கழிப்பது தான் திராவிட மாடலா ?

சென்னை பட்டினம்பாக்கம், அபிராமபுரம், மயிலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட 7 மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கி வரும்  59 நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.  

மகளிர் பண்டக சாலைகளின் கீழ் இயங்கும் நியாய விலைக்கடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய மானியத்தை முறையாக ஒதுக்காமல், அங்கிருக்கும் பொருட்களை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் ஊதியத்தை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியிருக்கும் கூட்டுறவுத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. 

மக்களின் வரிப்பணத்தில் தனியார் கார் நிறுவனத்தின் கார் பந்தயத்தை நடத்துவதற்கும், விளம்பரம் செய்வதற்கும் பல கோடி ரூபாயை ஒதுக்கி செலவு செய்யும் திமுக அரசிடம்,  நியாய விலைக்கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க நிதி இல்லையா? என பொதுமக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

எனவே, மகளிர் பண்டக சாலைகளின் கீழ் சென்னையில் இயங்கி வரும் நியாய விலைக்கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள இரண்டு மாத  ஊதியத்தை உடனடியாக வழங்குவதோடு, இனி வரும் காலங்களில் மாதந்தோறும் தடையின்றி ஊதியம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். ” என்று குறிப்பிட்டுள்ளார்.