ஐயப்பன் பாடல் சர்ச்சை- கொலை மிரட்டல் வருவதாக கானா பாடகி இசைவாணி கதறல்
அய்யப்பன் பாடல் சர்ச்சை எதிரொலியால் தனக்கு கொலை மிரட்டல் வருவதாக கானா பாடகி இசைவாணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கானா பாடல் மூலம் பிரபலமானவர் திரைப்பட பாடகி இசைவாணி. திரைப்பட இயக்குனர் ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பல்வேறு பாடல்கள் பாடி பிரபலமானவர் இசைவாணி. தமிழ் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தனது வழக்கறிஞர் குழுவுடன் நேரில் வந்து கொடுத்துள்ளார். அந்த புகாரில், தான் கானா படல் மற்றும் சமூக விழிப்புணர்வு பாடல்கள் பாடி பிரபலமாகியுள்ளேன். கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் "ஐ ஆம் சாரி ஐயப்பா" என்ற விழிப்புணர்வு பாடலை பாடினேன். அந்த ஆண்டில் அந்த பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. தற்போது சிலர் அந்த பாடலை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து அவதூறு வகையில் பேசி வருகின்றனர்.
இதே போல சிலர் பல்வேறு செல்போன் எண் மூலமாக ஆபாசமாக அறுவருக்க தக்க வகையில் திட்டி கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனது புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தோடு சிலர் இது போன்ற செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகாரில் தெரிவித்துள்ளார்.