5%,10% பரவாயில்ல.. ஒரேயடியாக 40% மேல் விலை கூட்டியிருப்பது வருத்தம் - தனியார் பள்ளி சங்கங்கள் கூட்டமைப்பு கண்டனம்..
அரசு பாடப்புத்தகங்களின் 40% விலை உயர்வை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு பாடப்புத்தகங்களின் விலை 40% க்கு மேல் ஏற்றப்பட்டதற்கு FePSA சார்பில் தமிழ்நாடு பாடநூல் கழகத்திற்கு வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு பள்ளி மாணவர்களுக்கு அனைத்து பாடப்புத்தகங்களையும் அரசே இலவசமாக வழங்குகிறது, தனியார் பள்ளி மாணவர்கள் மட்டும் விலை கொடுத்து வாங்குகின்றனர்.
தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகிய அனைவரும் செலுத்தும் பொது வரிப்பணத்தை எடுத்து, அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக பாடப்புத்தகங்களை வழங்கிவிட்டு, அந்த நிதிச்சுமையை சமாளிக்க தனியார் சுயநிதி பள்ளி மாணவர்களிடம் இருந்து கூடுதலாக வசூலிப்பது போல் உள்ளது, காதித விலை மற்றும் அச்சுக்கூலி ஆகியவை கூடியிருந்தாலும் 5% முதல் 10% வரை விலையை உயர்த்தி இருந்தால் பரவாயில்லை. ஒரேயடியாக 40% க்கு மேல் விலையை கூட்டியிருப்பது வருத்தத்துக்குறியது.
அதாவது 1 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களின் (பருவம் 1,2 &3) பழைய விலை Rs 390. புதிய விலை ரூ.550. இது 41% கூடுதல், அதேபோல், 3 ஆம் வகுப்பு புத்தகம் பழைய விலை Rs 430. புதிய விலை Rs 620. இது 44% கூடுதல், 5 ஆம் வகுப்பு புத்தகம் பழைய விலை Rs 510. புதிய விலை Rs 710. இது 39.3% கூடுதல், 10 ஆம் வகுப்பு புத்தகம் பழைய விலை Rs 790. புதிய விலை Rs 1130. இது 43% கூடுதல்.
இதனால், தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சராசரியாக 40% க்கு மேல் விலை கூட்டப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி இந்த விலை உயர்வை கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது 10% மட்டும் விலை கூட்டிவிட்டு, 30% விலையை குறைக்கவேண்டும் என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (பெப்சா) சார்பில் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.” என்று வலியுறுத்தியுள்ளார்.