×

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு ஜனநாயக உரிமையைப் பறிக்கும் நடவடிக்கை - ஜவாஹிருல்லா 

 

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை நடைமுறைக்கு ஒவ்வாத முரண்பாடுகளின் குவியல் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் நெருக்கத்தில், தோல்வி பயத்தாலும், தொடை நடுக்கத்தாலும் அவதிக்கு உள்ளாகியிருக்கும்  பாசிச ஒன்றிய பாஜக அரசின் கோமாளி நாடகத்தின் உச்ச காட்சியாகவே  ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை அமைந்துள்ளது. 4 வருடங்களாக நடைமுறைப்படுத்தப் படாத குடியுரிமை திருத்தச் சட்டம், எப்படித் தேர்தல் நெருக்கத்தில் உயிர்பெற்று, நாட்டில் இன்று பேசுபொருளாக மாற்றப்பட்டு இருக்கிறதோ, அதன் தொடர்ச்சியாக தான் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை சமர்ப்பிப்பு நாடகமும் அமைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றுடன் உள்ளாட்சி மன்றத் தேர்தலும் ஒரு சேர நடத்த இந்த அறிக்கை பரிந்துரைத்துள்ளது. இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத அபத்தமான பரிந்துரையாகும். எடுத்துக்காட்டாக ஒரு ஊராட்சி வார்டில் வாக்களிக்கும் வாக்காளர் வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என ஐந்து மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க வேண்டும்.  இத்தனை தனித்தனி வாக்குப்பதிவு இயந்திரங்களை வைப்பதற்கு ஒரு மண்டபமே வாக்குச் சாவடியாகத் தேவைப்படும். இதுவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் செலவுகளைக் குறைக்கும் என்ற வாதம் அபத்தமானது என்பதற்கு மற்றொரு எடுத்துக் காட்டு. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கோட்பாடு மக்களின் ஜனநாயக உரிமையைப் பறிக்கும் நடவடிக்கையாகும். முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையிலான குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை நடைமுறைக்குச் சாத்தியமில்லாத முரண்பாடுகளின் குவியலாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.