×

சம்பா பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செய்யக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்- ஜவாஹிருல்லா

 

சம்பா பருவத்துக்கான பயிர்க் காப்பீடு செய்யக் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “சம்பா, தாளடி பருவத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகள் எதிர்வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

காவிரியில் நீர் வரத்து இல்லாததாலும், பருவமழை பொழிவு போதுமான அளவுக்கு இல்லாத காரணத்தாலும் பெரும்பாலான விவசாயிகள் சம்பா சாகுபடி பணிகளைத் தாமதமாகத் தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், பெரும்பாலான இணையச் சேவை மையங்களில் காப்பீடு செய்வதற்கான கணினி சர்வர் சுணக்கமாக வேலை செய்வதாலும் அரசு அறிவித்துள்ள  நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்பது குறுகிய கால அவகாசமாக உள்ளது. 


எனவே விவசாயிகள் நலன் கருதிப் பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை நவம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், கடந்த சில ஆண்டுகளாக சம்பா பருவத்தில் காப்பீடு செய்த விவசாய நிலங்களுக்குப் பாதிப்பின் அடிப்படையில் முறையாகக் காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்கிற குறை விவசாயிகளிடையே இருப்பதைக் காண முடிகிறது. இது போன்ற குறைகள் இனிவரும் காலங்களில் ஏற்படாமல் இருக்க, காப்பீடு விஷயத்தில் அரசு உரியக் கவனம் செலுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.