×

“முஸ்லீம்களின் மீதான வெறுப்பு நடவடிக்கையே பாஜகவின் தோல்விக்கு காரணம்”

 

ஊழல் மற்றும் முஸ்லிம் வெறுப்புக்கு எதிராக கர்நாடக  மக்கள் வாக்களித்துள்ளதாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தெரிவித்துளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. கர்நாடகத்தில் இதுவரை நடைபெற்ற பாஜக ஆட்சி ஊழல் நிறைந்ததாகத் திகழ்ந்தது. மக்கள் நலனில் கவனம் செலுத்தாத தனது ஊழல் மிகுந்த நிர்வாகத்தைத் திசைதிருப்பவே முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பாஜக அரசு கர்நாடக மாநிலத்தில் மேற்கொண்டது.

ஹிஜாப் பிரச்சினை முதல் முஸ்லிம்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கை வரை ஊக்குவித்த பாஜக அரசு இறுதியாகக் கர்நாடகத்தில் 1995 முதல் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் அனுபவித்து வந்த நான்கு விழுக்காடு இட ஒதுக்கீட்டினையும் பறித்தது.

குஜராத்திற்கு அடுத்ததாக பாஜகவின் முஸ்லிம் வெறுப்பு நடவடிக்கைகளின் சோதனைக் கூடமாகக் கர்நாடக மாநிலத்தை பாஜக மாற்றிவந்தது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கர்நாடக தேர்தலில் அதிதீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டார்கள் அந்த பரப்புரையிலும் முஸ்லிம் வெறுப்பு தொனி பிரதிபலித்தது.

முஸ்லிம்களுக்கு எதிராக இந்த வெறுப்பு அரசியலைக் கர்நாடகத்தில் வாழும் பெரும்பான்மையான இந்து மக்கள் புறந்தள்ளி உள்ளார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி அமைந்துள்ளது.

2018ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு விரோதமாக நம்பிக்கை துரோகம் செய்த மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் இத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பித்து உள்ளார்கள். தனது இந்திய ஒற்றுமை பயணத்தின் வழியாக மக்களிடையே வெறுப்புணர்வுக்குப் பதிலாக நல்லிணக்கத்தை ஏற்படுத்திய ராகுல் காந்தி பயணத்திற்குக் கிடைத்த ஒரு வெற்றியாகவும் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருக்கின்றன.

தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கப் போகும் காங்கிரஸ் கட்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கர்நாடகத்தில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்கவும் பாஜக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் அனைத்தையும் களைவதற்கும் காங்கிரஸ் கட்சி உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.பாஜகவின் வெறுப்பு அரசியலைப் புறந்தள்ளி நல்லிணக்க அரசியலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ள கர்நாடக வாக்காளப் பெருமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.