சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சனையில் அரசு தலையிடனும் - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்..
சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் பிரச்சனையை சமூகமாக தீர்க்க தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். ஊதிய உயர்வு, போனஸ், 8 மணி நேர வேலை, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து 15 நாட்களுக்கும் மேலாக ஊழியர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஊழியர்களுக்கு பணிக்கு திரும்பவில்லை என்றால் பணிநீக்கம் செய்ய நேரிடும் என்று சாம்சங் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சி.ஐ.டி.யு போன்ற தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை சாம்சங் நிர்வாகம் ஏற்காத நிலையில், இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்று தெரிய வருகிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்களின் நலனை காக்கும் வகையில் சுமூக உடன்பாட்டை ஏற்படுத்தித் தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.