×

ஆந்திரா , தெலங்கானாவுக்கு ₹1 கோடி நிதியுதவி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்!

 

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திரா, தெலங்கானா மாநில அரசுகளின் முதல்வர் பேரிடர் நிவாரண நிதிக்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித்தீர்த்த கனமழையால் இரு மாநிலங்களிலும் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக ஆந்திராவில் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர், எல்லூரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆந்திராவில்  15 பேர். தெலங்கானாவில் 16 பேர் என மழை வெள்ள பாதிப்பால் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.  இரு மாநிலங்களிலும்  4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு,  சுமார்  2. 5 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பலரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். 

அந்தவகையில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், இரு மாநிலங்களுக்கும் தலா ரூ. 50 லட்சம் என ரூ. 1கோடி நிதியுதவி அளித்துள்ளார். இது தொடர்பாக  தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி,ஆர்,  “ஆந்திரா, தெலங்கானா இரண்டு மாநிலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரத்திலிருந்து மக்கள் மீண்டு வர இறைவனை பிரார்த்திக்கிறேன். வெள்ள மீட்பு பணிகளுக்காக இரண்டு மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைக்கு உதவும் வகையில், எனது பங்களிப்பாக 2 மாநிலங்களுக்கும் தலா ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.