×

#JUST IN : கோவையில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..!

 

கோவை பாராளுமன்ற தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார்.  அதேபோல அவருக்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஒரு அமைப்பு தேர்தல் முடிந்த பின்னர் இதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஸ்திரேலியாவில் பணியாற்றக்கூடிய கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரத்தை சேர்த்த சுதந்திர கண்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில், மக்களவை தேர்தலில் வாக்களிக்க அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து கோவை வந்ததாகவும், வாக்களர் பட்டியலில் தனது பெயர் மற்றும் தனது மனைவி பெயர் நீக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் கூறியிருந்தார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலிலும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வாக்களித்த நிலையில், இந்த முறை தனது பெயரும், மனைவி பெயரும் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதே முகவரியில் வசிக்கும் தனது மகள் பெயர் பட்டியலில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதேபோல், தங்கள் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் கூடியிருந்தார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 15ம் தேதி மின்னஞ்சல் மூலம் புகார் அளித்த போதும், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.

 அதனால் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து, வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனவும், அதுவரை கோவை மக்களவை தொகுதி தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வு முன்பு சுதந்திர கண்ணன் தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது.இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இவ்வழக்கை இன்று (30.4.24) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக ஒப்புதல் அளித்தனர். 

இந்த வழக்கு நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா, நீதிபதி ஜி.சந்திரசேகரன் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினார். 

அவர் தனது வாதத்தில், கடந்த பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.  மனுதாரர் தொகுதியில் வசிக்காமல் ஆஸ்திரேலியாவில் வசித்து வந்துள்ளார் என கூறிய வழக்கறிஞர் நிரஞ்சன், 2021 சட்டமன்ற தேர்தலின் போதே வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இதை அடுத்து ஏற்கனவே வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் விடுபட்டிருக்கும் போது ஏன் ஆட்சேபனம் தெரிவிக்கவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் படிவம் 6- ரை ஏன் பயன்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினர்.வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோதே ஆட்சேபனம் தெரிவித்திருக்க வேண்டும் எனக்கு கூறி அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.