×

தொடரும் சாதி ஆணவப்படுகொலைகள்- குற்றவாளிகளை கைது செய்க: கே.பாலகிருஷ்ணன்

 

சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கும், உரிய தண்டனைகள் பெற்றுத் தருவதற்கும் தனி சட்டம் வேண்டும் என சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தை சேர்ந்த பட்டியலினத்தில் இருவேறு பிரிவுகளை சார்ந்த ருத்ரப்பிரியா என்பவரும், அழகேந்திரன் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சென்றுள்ளனர். பெண்ணின் உறவினர் பிரபாகரன் திருப்பரங்குன்றத்தில் அவர்களை தேடிப்பிடித்து கட்டாயப்படுத்தி பிரித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார். மேலும், அழகேந்திரனை தாக்கியுள்ளார். இச்சம்பவம் நடந்த அன்று (24.06.2024) இரவே திருமணம் செய்து வைக்க தயாராக இருப்பதாக தொலைபேசியில் அழைத்து பேரையூர் வட்டம், வேலாம்பூர் கண்மாய்க்குள் அழகேந்திரனை படுகொலை செய்துள்ளனர். அருப்புக்கோட்டை வட்டார காவல்நிலையம் மற்றும் கள்ளிக்குடி காவல் நிலையங்களில் அழகேந்திரனின் தாயார் மாரியம்மாள் கொடுத்த புகாரை ஏற்றுக்கொள்ள காவல்நிலையத்தில் இருந்தவர்கள் மறுத்துள்ளனர்.

சாதி ஆணவத்தால் அழகேந்திரன் தலையை துண்டித்து கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் ஆணவக்கொலைகள் நடப்பதற்கு முன்பும், நடந்த பிறகும் கூட பல காவல் நிலையங்களின் அணுகுமுறை அலட்சியமானதாகவும், சாதி சார்ந்ததாகவுமே இருக்கிறது. கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திடவும், பாராமுகமாக இருந்த கடமை தவறிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. மேலும், சாதி ஆணவப்படுகொலைகளை தடுப்பதற்கும், உரிய தண்டனைகள் பெற்றுத் தருவதற்கும் தனி சட்டம் வேண்டும் என்கிற சிபிஐ(எம்) கட்சியின் நிலைபாட்டை தொடரும் சாதி ஆணவப்படுகொலைகள் வலுப்படுத்துகின்றன. தமிழ்நாடு அரசு இத்தகைய சட்டம் குறித்த தனது நிலைபாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.