×

விருப்பு - வெறுப்போடு  நீதிபதிகளை நியமிப்பதா? - கி.வீரமணி கேள்வி!

 

விருப்பு - வெறுப்போடு உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் நீதிபதிகளை நியமிப்பதா? திராவிட கழக தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக நீதிபதிகளை - உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் நியமனம் செய்ய சட்டப்படி அதிகாரம் உள்ள ‘‘கொலிஜியம்‘’ பரிந்துரைக்கும் நீதிபதிகளை இறுதியாக நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு - அதாவது நடைமுறையில் உள்துறை, சட்டத்துறை, ஒன்றிய அரசுக்குள்ள நிலையில், இங்கு நடைபெறும் ஒன்றிய அரசு பரிந்துரைகளை பல காலமாகக் கிடப்பில் போடுவதோடு,  சில பெயர்களை விட்டும் - அடித்தும் - சில பெயர்களைத் தேக்கியும், சிலரை மட்டும் நியமிக்கும் ‘வேண்டுதல் வேண்டாமை’’ அடிப்படையில் நியமனம் நடைபெறுவதை உச்சநீதிமன்றம் நேற்று (7.11.2023) பகிரங்கமாகக் கண்டித்துக் கூறியிருப்பது மிக முக்கியமானது. பா.ஜ.க. ஆட்சி எப்படி நடைபெறுகிறது என்பதற்கான முக்கிய  ஆதாரக் கருத்தாகும் - வருத்தத்திற்குரியதுமாகும் உச்சநீதிமன்றத்தின் பகிரங்கக் கண்டனம் இப்படி வெளிப்படையாக வெடிக்கும் நிலையில், நிலைமை விபரீதமாகப் போய்க் கொண்டிருக்கிறது.


 

இதனை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டியதே இல்லை; இதில் புதைந்துள்ள உண்மை, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை, குறிப்பாக உயர்ஜாதியினரையோ அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் - ஷாகா பயிற்சியில் முன்பு கலந்துகொண்டு, முந்தைய அரைக்கால் சட்டை, லட்டி (தடி) சகிதம் வலம் வந்த ‘தகுதி’ படைத்தவர்களா?  என்று பார்த்ததே தான் (இதற்கு முன்பும்கூட பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதி நியமனங்கள் நடைபெற்றுள்ளன) அவையே தனித்தகுதி என்று நியமிக்கப்படுகிறார்கள்.அதனுடைய விளைவு பல உயர்நீதிமன்றங்களில் இன்று வரும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக மாநில அரசுகளின் கொள்கை முடிவுகளுக்கு எதிராக, தங்களது அதிகாரத்தினையும் தாண்டி பல பழைய அரைக்கால் சட்டை பாச உணர்ச்சியால் தீர்ப்புகளை எழுதி, பொது அமைதி, சட்டம் - ஒழுங்குக்காக அரசுகள் எடுக்கும் முடிவுகளை செல்லாது என்று தீர்ப்பளித்து, ஒரு தவறான நடைமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது - குறிப்பிட்ட வழக்குக்குச் சிறிதும் சம்பந்தப்படாது - சமரசம் செய்து முடித்த வழக்கைக் கூட மீண்டும் எடுத்து, தீர்ப்பு எழுதும் விசித்திரம் நடைபெறுகிறது. அண்மைக்கால வழக்குகளில் பல அப்படி உள்ளதற்குப் பல தீர்ப்புகளும் சான்றாக உள்ளன. அவசியம் வந்தால் விரிவாக விளக்கி, அதற்குரிய விலையையும் நாம் தரத் தயாராக இருக்கிறோம்.
 

ஏற்கெனவே அனுமதி கொடுத்துள்ள சில ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்களுக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை அனுமதி மறுத்தோ அல்லது பல ஊர்களில் சட்டம் - ஒழுங்கு நிலவரத்தையொட்டி, கலவரங்கள் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தடுக்க தடை போட்டால், அதற்கு வழக்காடிகளை மிஞ்சும் வேகத்துடன் பல தீர்ப்புகளைத் தரும் நீதிப் போக்கு காணப்படுவது விரும்பத்தக்கதா? ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - மற்ற கட்சிகள், அமைப்புகள் போன்றதா? ‘உள்ளொன்று புறமொன்று’ என்று திட்டமிட்டு செயல்படுவது - மூன்றுமுறை முன்பு தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற பழைய கதை இருக்கட்டும்! ‘தேசப்பிதா’ காந்தியாரை சுட்டுக்கொன்ற கோட்சே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் பயிற்சி பெற்றவர் என்பதை யாராவது மறுக்க முடியுமா? அவர் விலகி விட்டார் என்பதைக்கூட அவர் தம்பி கோபால் கோட்சே மறுத்துள்ளார் என்பது ஆதாரப்பூர்வமானதல்லவா! அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் ஊர்வலம் என்பது - மற்ற கட்சிகள் நடத்தும் ஊர்வலம், பேரணி போன்றதல்ல. மாறாக, அனுமதி கேட்கையில் அவர்கள் பயன்படுத்தும் சொல், ‘‘Route March’’ என்று கேட்டு, கையில் தடி முதலியவற்றோடு அவர்கள் ஊர்வலத்தில் வருவது வழக்கம்.