முதல்வருடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு! கலைஞர் நினைவு நாணயம் பரிசளிப்பு
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, அவர்களின் வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த போது, அவருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.
இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.
நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.