சமத்துவத்தை சுவாசமாக கொண்டு வாழ்ந்த பெரியாரின் புகழை போற்றுவோம் - கமல்ஹாசன்
தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியில் தலைவர் கமல்ஹாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
தந்தை பெரியார் ஈரோடு வெங்கடநாயக்கர் - சின்னத்தாயம்மாள் தம்பதியருக்கு 1879ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். சாதியப் பாகுபாட்டினைக் கண்டு வெகுண்டெழுந்து சமூக நீதி காத்திடத் தொடர்ந்து போராடியவர் தந்தை பெரியார் அவர்கள். மனிதனுக்கு மனிதன் ஏற்றத்தாழ்வு இல்லை, ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு, சாதி ஒழிப்பு, பெண் அடிமைத்தனம் ஒழிப்பு ஆகியவற்றிற்காகத் தொடர்ந்து போராடினார். 1924ஆம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டமைக்கு எதிராகப் போராடி "வைக்கம் வீரர்" என்று அழைக்கப்பட்டார். இந்திய வரலாற்றிலேயே தீண்டாமையையும், சாதிக் கொடுமையையும் எதிர்த்து முதன் முதலாக நடைபெற்ற போராட்டம் என்ற சிறப்பை வைக்கம் போராட்டம் பெற்றது. பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடியவர் தந்தை பெரியார் அவர்கள். சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாய் திகழ்வதற்கு வழிகாட்டி, தனது இறுதி மூச்சு வரை சுயமரியாதைக் கொள்கைக்காகவே வாழ்ந்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழ்நாட்டில் சமூக மாற்றத்தை உருவாக்கி, மக்களிடையே ஒற்றுமையை வளர்த்து, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை மேம்பட பெரும்பங்காற்றினார்.