17 ஆண்டுகளுக்கு பின் நடந்த காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா..!
பெருமாளுக்கு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைண திவ்ய தேசங்கள் உள்ளன. இந்த 108 வைணவ திவ்ய தேசங்களில் காஞ்சிபுரத்தில் மட்டும் 15 திவ்ய தேசங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கும், காமாட்சி அம்மன் கோயிலுக்கும் இடையில் அமைந்துள்ள ஆரண வல்லித் தயார் சமேத அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில். இந்தக் கோயிலுக்குள் ஸ்ரீ ஊரகத்தான் சன்னிதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சந்நிதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னிதி, கார்வான பெருமாள் சன்னிதி என நான்கு திவ்ய தேசங்கள் ஒரே இடத்தில் இருப்பது சிறப்பு பெற்றது.
இந்த திருத்தலம் திருமழியிசை யாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இந்தக் கோயில் மூலவர் ஓங்கி உயர்ந்து உலகை அளக்கும் பெருமாளாக பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்தக் கோயிலில் கடைசியாக கடந்த 2007ம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதனால் கோயில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ உலகளந்த பெருமாள் சன்னிதி, ஆரண வல்லித் தாயார் சன்னிதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு, வண்ணங்கள் தீட்டப்பட்டு, ஓவியங்கள் வரைந்து பழமை மாறாமல் புதுப்பிக்கப்ட்டது.
இதனைத் தொடர்ந்து 17 ஆண்டுகள் கழித்து உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் மகா குடமுழுக்கு விழா விமர்சையாக நேற்று நடைபெற்றது. முன்னதாக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு யாக சாலைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இந்திய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தில் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோயில் பட்டாச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை ஊர்வலமாக கொண்டு வந்து கோயில் ராஜகோபுரம் சன்னிதி கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழாவை நடத்தி வைத்தனர். இந்த குடமுழுக்கு விழாவில் காஞ்சிபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று கோபுர தரிசனம் செய்து பெருமாளை வணங்கி வழிபட்டனர்.