×

சூர்யாவின் நடிப்பு, உழைப்பு பிரமிக்கவைக்கிறது- கங்குவாவுக்கு இயக்குநர் சுசீந்திரன் ஆதரவு

 

தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், கங்குவாவை காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி உள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி, வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். இதற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். நடிகர் சூர்யா மாறுபட்ட தோற்றம் மற்றும் படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரைக்கு வந்ததால் ரசிகர்கள் மத்தியில், பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மேலும் 3டி தொழில்நுட்பத்திலும் இப்படம் தயாராகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி  ஆகிய ஐந்து மொழிகளில் 280 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படத்திற்கு பல்வேறு எதிர்மறை விமர்சனங்களும், படம் குறித்த அவதூறுகளும் பரப்பப்பட்டன.

இந்நிலையில் இயக்குநர் சுசீந்திரனும் கங்குவா படத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கடிதம் ஒன்று வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “நேற்று மாலை என் குழந்தைகளுடன் கங்குவா திரைப்படத்தைப் பார்த்தேன், தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரமாண்டமான திரைப்படம் இது. ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் சிவா. அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். சூர்யா sir-ன் நடிப்பு, உழைப்பு பிரமிக்க வைக்கிறது. Camara, CG என அனைத்துத் துறைகளிலும் உலகத் தரத்துக்குத் தமிழில் இந்த கங்குவா. தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள், காலம் தாழ்த்தி கொண்டாடி விடாதீர்கள். அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்தத் திரைப்படத்தைப் பாருங்கள். கங்குவா உங்களை மகிழ்விப்பான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.